search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் உயிரிழப்பு"

    கோபி அருகே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது வாய்க்காலில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பவானிசாகர் அணையில் இருந்து 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி சென்று கொண்டிருக்கிறது.

    தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, சேலம், நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோபி பகுதிகளுக்கு சுற்றுலா வந்து கொடிவேரி அணை மற்றும் வாய்க்கால்களில் குளித்துக்கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த பகவதி ராஜா (வயது 21) மற்றும் முத்துக்குமரேசன், ஜவகர் (21), ஹரிபிரசாத் (21), சங்கீதா (21), பவித்ரா, கோபி காசிபாளையம் பகுதியை சேர்ந்த மைதிலி (2) ஆகிய 7 பேர் கொண்ட நண்பர்கள் சுற்றுலா செல்ல ஒன்று சேர்ந்தனர்.

    மேலும் வாலிபர் ஜவகருக்கு அன்று பிறந்த நாளையொட்டி பிறந்த நாளை இயற்கையோடு கொண்டாடி மகிழ கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் ஓடும் தடப்பள்ளி வாய்க்காலுக்கு வந்தனர்.

    வாய்க்கால் கரையோரம் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது பகவதி ராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் எதிர்பாராத விதமாக வாய்க்காலுக்குள் தவறிவிழுந்து விட்டனர். கரையில் இருந்த மற்ற நண்பர்கள் வாய்க்காலில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் வாய்க்கால் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களை காப்பாற்ற முயன்றபோது வாலிபர் ஹரிபிரசாத்தும் சிக்கினார். மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்தும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் மூழ்கி பலியான பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    அவர்களின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்று மதியம் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    ×